Friday 10 April 2015

News(10.04.2015)

கர்ப்பிணிகளுக்கு தாய்சேய் நல ஆரோக்கிய குடைகள்

First Published : 10 April 2015 12:53 AM IST
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் பொது சுகாதாரத் துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தாய்சேய் நல ஆரோக்கிய குடைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் எஸ். பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சுகாதாரத் திட்ட தாய்சேய் நல மைய சிறப்பு ஆலோசகர் மருத்துவர் அசி. கண்ணம்மாள் தலைமை வகித்து விழாவை தொடக்கிவைத்து பேசுகையில், பேறுகாலம் என்பது நோய் இல்லை. இயற்கையான நிகழ்வு. எனவே, பேறுகாலம் குறித்து பெண்கள் பெருமைப்பட வேண்டும். எளிமையாக கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்டு மருத்துவத் துறையின் ஆலோசனயை பின்பற்றி தாய்சேய் நலம் காக்க வேண்டும் என்றார்.
மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் வீ.சி. சுபாஸ்காந்தி பேசுகையில், வெயிலின் தாக்கத்திலிருந்து குடைகள் பாதுகாப்பது போல, ஸ்கேன் உள்ளிட்ட பேறுகால பரிசோதனைகள் தாய்சேய் நல ஆபத்துகளிலிருந்து கர்ப்பிணிகளை பாதுகாக்கிறது. எனவே, கர்ப்பிணிகள் பேறுகால பரிசோதனைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றார்.
முகாமில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு கோடைகாலத்தை முன்னிட்டு, ரோட்டரி சங்கங்களின் சார்பில் தாய்சேய் நல குடைகள் வழங்கப்பட்டன.
சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுசங்கத் தலைவர் மாருதி. க. மோகன்ராஜ், ஆ.லே. சொக்கலிங்கம், இதயதுல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற 62 கர்ப்பிணிகளை ராணியார் மகப்பேறு சிறப்பு மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி, கௌரி, தமிழ்மணி, சிறப்பு செவிலியர் சூரியபிரியா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து 29 பேர் அதிக கவனம் தேவைப்படுபவர்களாகக் கண்டறிந்தனர். சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், திருச்செல்வம், கண்ணன், குமரேசன், முகமதுஉசேன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சுகாதார செவிலியர் சலோமி நன்றி கூறினார்.

அன்னவாசல் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் விரைவில் நிறைவடையும்

First Published : 10 April 2015 12:54 AM IST
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் சட்டப்பேரவை 14-வது மனுக்கள் குழுத் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் முன்னிலையில் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
பிறகு ஆர். மனோகரன் பேசியது:
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில், சுற்றுலா துறையின் சார்பில், ரூ. 1.10 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள், இலுப்பூர் பேரூராட்சியில் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 1 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பேருந்து போக்குவரத்துப் பணிமனை கட்டுமானப் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின்போது, தளம் அமைக்கும் பணியில் அதிக மணல் நிரப்பி உரிய தரத்தில் தரைதளம் அமைக்கவும், நடைபெற்று முடிந்த பணிகளை முறையாக பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
ஆய்வில், சட்டப்பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலர் அ.மு.பி. ஜமாலுதீன், திட்ட இயக்குநர் எம். சந்தோஷ்குமார் (மாவட்ட ஊரக வளர்சி முகமை), மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, ஒன்றியக் குழுத் தலைவர் வி. இளவரசி, பேரூராட்சித் தலைவர் குரு. ராஜமன்னார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோ. வீரப்பன், எஸ்.கே. விஜயநாதன் (ஊ), செயல்அலுவலர் ந. ராஜ்குமார் (அன்னவாசல்), சுலைமான்சேட் (இலுப்பூர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

First Published : 10 April 2015 01:59 AM IST
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் க. கார்த்தி. இவர், விராலிமலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு, பிறகு பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், இவரது அண்ணன் க. சண்முகம் மகனை கார்த்தி கட்டையால் வியாழக்கிழமை அடித்துக் கொண்டிருந்தாராம். இதை இவரது மற்றோரு அண்ணன் க. மணிகண்டன் தடுத்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கார்த்தி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் தலையில் தாக்கியுள்ளார்.
பிறகு, அருகேயிருந்த டீக்கடைக்குள் புகுந்து அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த ச. பாஸ்கர் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரிடமிருந்து 1500 ரூபாயை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சண்முகம், பாஸ்கர் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், விராலிமலை காவல் ஆய்வாளர் அ.மா. செந்தில்மாறன் வழக்குப் பதிந்து கார்த்திக்கை கைது செய்தார்.
கார்த்தி தாக்கியதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கிணறு வெட்டும்போது மண் சரிந்து தொழிலாளி சாவு

First Published : 10 April 2015 01:59 AM IST
 புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே தோட்டத்தில் கிணறு வெட்டும்போது, மேலிருந்த மண் கிணற்றுக்குள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
விராலிமலை பேராம்பூர் அருகே உள்ள தெற்கு மலம்பட்டியைச் சேர்ந்தவர் துரை (எ) சவரிமுத்து (55). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சில தொழிலாளர்களுடன் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடியில் ராசு என்பவரது தோட்டத்து கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
புதன்கிழமை மாலை கிணற்றில் உள்ள மண் கலந்த கற்களை மண்சட்டியில் வைத்து உருளை மூலம் மேலே இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று மண்சட்டி தவறி கிணற்றுக்குள் இருந்த சவரிமுத்து தலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சவரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து இலுப்பூர் காவல் ஆய்வாளர் ஆர். பாலசுந்தரம் (பொ) வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment