Wednesday 8 April 2015

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

First Published : 09 April 2015 05:25 AM IST
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வளமையம் சார்பில் விராலிமலை ஒன்றியத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு உபகரணங்கள் வழங்கும் விழா வட்டார வளமையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேற்பார்வையாளர் ச. புவனேஸ்வரி (பொ) விழாவை தொடக்கி வைத்துப் பேசினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ரோஸ்மேரி சகாயராணி வரவேற்றார். விழாவில் அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்கள், இயன்முறை (பிஸியோதெரபி) மருத்துவர், சிறப்பாசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர். இதில் உபகரணங்களின் பயன்பாட்டை பற்றியும், செயல்படுத்தும் முறைப் பற்றியும், சிறப்பாசிரியர்களும், இயன்முறை மருத்துவரும் விளக்கிக் கூறினர்.
விழாவில் உதவி உபகரணங்களான காதொலிக் கருவி, இருசக்கர நாற்காலி மற்றும் எம்எஸ் கிட் (உளவியல் ரீதியிலான மருத்துவ உபகரண பொருள்கள்) வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, ஆட்டிஸம் (தற்புனைவு ஆழ்நிலை) சிந்தனையாளரின் திறனை மேம்படுத்த அவர்களுக்கு தகுந்த கல்வி, உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை இந்நாள் முதற்கொண்டு அளிப்பேன் என பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் உலக தற்புனைவு ஆழ்நிலை (ஆட்டிஸம்) தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் பள்ளி ஆயத்தப் பயிற்சி மைய மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment